Tuesday, January 31, 2012

ஓவியம்

அவளைவிட அழகான ஒரு ஓவியத்தை
அவளுக்கு பரிசளிக்கும் முயற்சியில்
இன்று வரை தோற்றுக்கொண்டிருக்கிறேன் நான்.

Monday, January 30, 2012

தேவதை


மிகைப் படுத்தாமலேயே
அவள் ஒரு தேவதை தான்...

என் இமை மூடினால்,
இமை திறந்த அவள் முகம் தெரியும்.

அவள் பொய் பேசினால்,
உண்மைக்கே உண்மை பிடிக்காமல் போகும்.

அவள் ஓவியம் வரைந்தால்,
ஓவியமே அவள் தொட்ட தூரிகை தேடும்.

மறுபடியும் சொல்கிறேன்,
மிகைப் படுத்தாமலேயே
அவள் ஒரு தேவதை தான்...

ஒரு நிகழ்வு


அன்றொரு நாள்...
இரு புறமும் மரங்கள்
தாங்கிய பசுமைச் சாலையில்
உன் கைகோர்த்து நடக்க மறுத்தற்காக
கண்ணீர் சிந்தினாய்...

இன்று தான் புரிகிறது,
எல்லா சூழ் நிலைகளிலும் கண்ணீர் துளிகள்
உனக்கு மட்டும் சொந்தமானதல்ல...

Saturday, January 28, 2012

இது ஒரு கனவு



தனியொரு அறையில் நாம் இருவரும் வினவ,
விடியாத இரவாக இருள் வந்து சேர,
பற்றவைத்த தீக்குச்சியால் உன் முகம் மட்டும் மிளிர,
பிறைச் சந்திரன் ஒரு நொடியில் முழு மதி ஆனது...

என்னவளுக்கு பிடித்த என் கவிதை


எண்ணிக் கொண்டிருக்கிறேன்,
என்னவள் ஒரு மணி நேரத்திற்கு
எத்தனை முறை கண் இமைக்கிறாளென்று,
கண் இமைக்காமல்..

Friday, January 27, 2012

தனி இலை

இது ஒரு பெரிய வனத்தின்
சிறிய உறுப்பினர்...

தப்பி வந்த
ஒரு தனி இலை...

யாரும் தேடி வராத வரை
இது எனக்கே சொந்தம்...

இதன் அழகிய தோற்றம் கண்டு
இயற்கையை நேசிப்போம் நாம்...

Thursday, January 26, 2012

என் டைரி


என் டைரியின் கனவுக்கான வரிகளை
தினமும் திருடிச் செல்வது உன் நினைவுகள் தானடி...

Wednesday, January 25, 2012

பிரிவு

நாம் இணைந்த பிறகு ,
பிரிவு எப்படி சாத்தியமாகும்.
நான் எப்படி சுயநலக்காரனாக முடியும்,
என் சுயத்தையே உன்னிடம் இழந்த பிறகு..

உன்னை நினைவுபடுத்தும் எல்லாவற்றையும்
திருப்பித் தர சொன்னாயெ,
அப்படியென்றால் நான் என்னையும் தான் தர வென்டும்,
பிறகு நீ என்னை ஏற்றுகொள்ள மறுப்பது ஏன்.

வலி

அன்று உன் காதலால் என்னை
என் முதல் கவிதை எழுத வைத்தாய்,
இன்று உன் பிரிவால் என்னை முழு கவிஞன் ஆக்குகிறாய்.

உன்னைப்பற்றி நினைக்கக் கூடாது
நினைக்கக் கூடாது என
நினைத்து நினைத்தே,
உன் நினைவோடே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

மனதின் வலியை வார்த்தைகளால்
வெளிப்படுத்த முடியுமா முடியாதா
என்கிற சோதனை முயற்சியாகத்தான்
உன் பிரிவை பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன்.

என்னுடைய இந்த கவிதைகளெல்லாம் என் தமிழுக்கும்,
உன் நினைவிற்கும் பிறந்த குழந்தைகள் தானடி.

பரிசுக் கவிதை


உன் நினைவாக வைத்திருந்த
நீ கொடுத்த ரூபாய் நோட்டையும்
நேற்று கொடுத்துவிட்டேன்...

உன் நினைவாக
உன் நினைவுகளே இருக்கும் போது
பிறகெதற்கு மற்றதெல்லாம்...

உன் தம்பியின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் to My friend Nanthakumar Kandasamy