Thursday, October 11, 2012

மீண்டும் வராத நினைவுகள்




மீண்டும் வராத நம் நினைவுகளிருந்து 
மீண்டு வர வேண்டியே இந்த கவிதைகள்...

என்னை ஆறுதல்படுத்தும் செயற்கை 
முயற்சியாகத்தான் எழுத தொடங்குகிறேன்...

எல்லா துவக்கங்களின் போதும் 
உன் நினைவு தொட்டே எழுத தொடங்குகிறேன்...

எழுதி முடிக்கும் வேளைகளில் 
விரல்களோடு சேர்த்து மனமும் நடுங்கிபோகிறது...

Tuesday, September 4, 2012

வெளிப்படுத்தப்படாத நினைவுகள்















வெளிப்படுத்தப்பட் ட உணர்வுகள் மறைந்து
போகின்றன வெறும் கவிதைகளாக...

வெளிப்படுத்தப்படாத உன் நினைவுகள்
எப்போதும் என்னுடனே பொக்கிஷமாக...

Friday, July 20, 2012

இன்று முதல்


இன்று முதல்,
நீ நீயல்ல,
நான் அதே நான் தான் ....

உன் இருத்தலிற்கும் பிரம்மைக்கும்
வித்தியாசம் மறந்த நிலையிலும்,

நியாயப்படுத்தலிற்கான சாத்தியக் கூறுகளை
உணர முடியாத நிலையிலும்,

உன் நினைவுகளை மட்டும் எப்போதும்
அசைபோட்டுக் கொண்டிருக்கும் முதிர்ந்த இளைஞனாக...

Tuesday, July 17, 2012

மீண்டும் காதல்



மீண்டும் ஒரு வாழ்த்து அட்டை,
புதிய காதல் கவிதையோடு தயார் நிலையில்,
ஆனால் நான் மட்டும் நானில்லை.....

கடந்து வந்த பாதை,
கற்றுக் கொடுத்த பாடங்கள்,
உறங்காத விடியாத இரவுகள்,
இவையெல்லாம் இன்னொரு ஜென்மம் கேட்கிறது,
மீண்டும் ஒரு முறை யாரையாவது
உண்மையாக காதலிக்க...
  

Friday, June 8, 2012

நம் கடைசி சந்திப்பின் இறுதி நிமிடம்



நான் இன்னும் உயிர்த்திருக்கிறேன்.....
நம் கடைசி சந்திப்பின் இறுதி நிமிடம்,
இப்போது தான் முடிந்ததாக எல்லா நிகழ்வுகளின்
இறுதியிலும் நினைவுபடுத்திக் கொள்கிறேன்....
அதுதான் ஆழ்கடல் அமைதி தரும் மரணம்
இன்னும் தூரமிருப்பதாக என்னை உயிர்த்திருக்கச் செய்கிறது....

Friday, May 11, 2012

நீ இல்லாத இரவு






சிதைந்து போன நினைவுகளோடு
விரக்தியின் விளிம்பில் நான்,
மழை காணாத தேசத்தின் வறட்சியும்,
வறண்டு போன என் மனதோடு
போட்டியிட்டு தோற்றுப் போகிறது,
நீ இல்லாத ஒவ்வொரு இரவுகளிலும்....

Thursday, May 3, 2012

அது ஒரு பழைய ரயில் நிலையம்




















அது ஒரு பழைய ரயில் நிலையம்...
யாருமற்று அனாதையானதாய்,
பசுமையற்ற மரங்களுடன்,
அழுகின்ற குழந்தையின் சிணுங்கள்களோடு,
வெறும் ரயில்கள் வந்து போகும் இடமாக மட்டுமிருந்தது...
நாம் சந்திக்கும் ரயில் நிலையத்தின் உயிர்ப்பு,
இங்கே தொலைந்து போயிருந்தது....

Thursday, March 22, 2012

நினைவுகளின் சுவடுகள்


உன்னை காதலிக்கத் தொடங்கும் போதே
காத்திருக்கத் தொடங்கி விட்டேன்.

அந்த காத்திருப்புக்கள் தான்
என்னை கவிதை எழுத வைத்தது.

அந்த கவிதைகளெல்லாம் வெறும்
சேர்க்கப்பட்ட வார்த்தைகள் அல்ல.
பிரிந்து போன நம் நினைவுகளின் சுவடுகள்.

Saturday, March 10, 2012

தீர்ந்து போன இரவு, தீராத காமம்



தீர்ந்து போன இரவு,
தீராத காமம்.

உதிர்ந்து போன சில பூக்கள்,
நீ கடித்த உதட்டுக் காயங்கள்.

உன் வாசம் வீசும் என் தோள்கள் என,
ஒரு இனிய இரவு குறித்த இன்ப
நினைவுகள் தொடர்கின்றன.

Wednesday, March 7, 2012

தனிமை திருடும் நிலவு


நாம் சேர்ந்து ரசித்த நிலா,
நிலா ரசிக்கும் போது நீ,
இருவருமே பிரகாசமானவர்களே.

உன் நினைவு தூண்டி
தனிமை திருடும் நிலவு,
நம் பிரிவு பார்த்து
தேய்ந்து மறையுதோ..

Tuesday, March 6, 2012

உணர்ந்து எழுதியது



இது எழுதி உணர்ந்ததல்ல,
உணர்ந்து எழுதியது.

முரண்பாடுகளே இல்லாத உறவு,
முழுமையடைவதற்கான வாய்ப்புகள் குறைவு.

Sunday, February 26, 2012

உன் விரல் தொடும் நிகழ்வு


சில இனிப்பான நிமிடங்களுக்காக
பல மணி நேர காத்திருப்புகளும்
அது கொடுத்த போதைகளும்,

பரிசளிக்கும் தருணங்களை
உன் விரல் தொடும் நிகழ்வென
பதிவு செய்த பேனா பிதற்றல்களும்,

இனி நாம் நேரிட விரும்பாத
நெருடலான நம் சந்திப்புகளின்
காயத்தை ஆழப்படுத்தலாம்.

Friday, February 24, 2012

இரவு நேரப் பயணங்கள்



உன்னை விட்டு பிரிந்தும்,
உன் நினைவுகளோடு சேர்ந்தும்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

உனக்கான நினைவுகளைளோடு,
இறுகிய மன நிலையோடான
என் இரவு நேரப் பயணங்கள்
இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது

Wednesday, February 22, 2012

கருத்தரித்த கனவுகள்



நீ காட்சி தரும் எல்லாக் கனவுகளும்,
கவிதைகளாக கருத்தரிக்க
அருள் புரிவாய் என் காதல் தேவதையே..

நாம் பயணித்த சாலை




ஜன்னலோர இருக்கை,
தோள் சாய்ந்த நீ,
என் கை கோர்த்த உன் கை
இவை ஏதுமின்றி
நாம் பயணித்த சாலையோடு மட்டும்
உறவாடிக்கொண்டிருக்கின்றன
என் நினைவுகள்.

Thursday, February 16, 2012

கண்ணீர்


எப்போதாவது உன் நினைவுகளால்
தோன்றும் கண்ணீர்த் துளிதான்
இன்னும் நான் உயிர்த்திருப்பதை
மீண்டும் உறுதிசெய்கின்றது.

பிடிக்காததில் பிடித்தது


உன்னிடம் பிடிக்காததில் பிடித்தது,
அந்த முன்கோபமும் அப்போது நீ
என்னை திட்டும் வார்த்தைகளும் தான்.

Saturday, February 11, 2012

காதல் பரிசு


உன் பெயர் மட்டும்
எழுதி வைத்த வெள்ளைக் காகிதம்,
எனக்கு நானே
தருகின்ற காதல் பரிசு.

உறவு


நம்முடைய காதல்
மனிதம் தாண்டிய,
கடவுள் தொடாத,
வாழ்வியலில் எல்லோர்க்கும்
சாத்தியமான உறவுதான்.

Thursday, February 9, 2012

உன் உதட்டோர புன்னகை



உன் உதட்டோர புன்னகை தான்
காதல் கரை ஒதுங்கும் என்னை
மீண்டும் உள்ளிலுத்துச் செல்லுதடி...

Tuesday, February 7, 2012

மறந்து போன கனவுகள்


கடவுள் வரம் தருவதாக ஒப்புக்கொண்டால்,
மறந்து போன கனவுகளை திரும்பக் கேட்பேன்.

மறந்து போன கனவுகள் குறித்த
என் ஆசைகள் அலாதியானது.

அது எப்போதும் என்னை ஆச்சர்யப்படுத்துகிறது.

நம் கடைசி சந்திப்பு


நம்முடைய எல்லா சந்திப்புகளின் போதும்
பேச்சை தொடங்கியதும் முடித்ததும் நீதான்,
நம் கடைசி சந்திப்பைத் தவிர.

நம்முடைய எல்லா சந்திப்புகளும்
ஊடலோடு தொடங்கி காதலோடு முடிந்திருக்கின்றன,
நம் கடைசி சந்திப்பைத் தவிர.

நம்முடைய எல்லா சந்திப்புகளின் போதும்
உன் கைகள் என் கைகளுக்குள் இருந்தன,
நம் கடைசி சந்திப்பைத் தவிர.

ஏனென்றால் நம் இருவருக்கும் தெரியும்
இது தான் நம் கடைசி சந்திப்பென்று...

நினைவுகள்


என் முகப் பக்கத்தின் சுவரெங்கும்
சிதறிக் கிடக்கும் கவிதைகள் யாவும்
உன் நினைவுகள் தானடி...

உன் நினைவுகளைப்பற்றி எழுதும்
எல்லா கவிதைகளுமே அழகானவை தான்.

எனக்காக நீயும் உனக்காக நானும்
நமக்காக நாமும் இத்துனை நாள்
சேமித்ததில் மிதமிருப்பது இந்த
நினைவுகள் மட்டும் தானே...

Monday, February 6, 2012

காதல் கொடுத்த பரிசு


உனக்கு பிடித்த நான் தான்,
உண்மையிலேயே எனக்கு பிடித்த நான்...

நம் பிரிதல் குறித்த புரிதல் தான்
நம் காதல் நமக்கு கொடுத்த பரிசு...

காதல்



காதல் என்பதே ஒரு வித்தியாசமான உணர்வு,
அது இருவரின் வேற்றுமைகளை களைந்து ஒன்றுபடுத்தும்,
பிறகு இருவரையும் இந்த உலகிலிருந்து பிரித்து தனிமைப்படுத்தும்.

Sunday, February 5, 2012

உன் தாவனி

தொட்டுச் செல்லும் உன் தாவனி நுனி முடிச்சி
விட்டுச் செல்ல மனமில்லாத உன் மனதின் முடிச்சவிழ்க்கிறது...

தனிமை


தனிமை என்பதே
ஒருவகை போதை தானடி,

அது தான் உன்னோடு நானிருந்த
எல்லா நிமிடங்களையும் ஞாபகப்படுத்துகிறது...

Thursday, February 2, 2012

நிலாவும் நீயும்




நிலாவானம்,முழுமதி, பிறைச் சந்திரன் என
எனை மயக்கும் மாய வார்த்தைகளுடன்
உன் பெயரும் சேர்ந்ததடி.

முத்தம்


உன்னை பார்க்கும் போது மட்டும்
சிரிக்கும் என் இதழ்கள்,
என் பெயரை கேட்டாலே
சிரிக்கும் உன் இதழ்கள்
இன்னும் ஏன் இணையவில்லை.

Tuesday, January 31, 2012

ஓவியம்

அவளைவிட அழகான ஒரு ஓவியத்தை
அவளுக்கு பரிசளிக்கும் முயற்சியில்
இன்று வரை தோற்றுக்கொண்டிருக்கிறேன் நான்.

Monday, January 30, 2012

தேவதை


மிகைப் படுத்தாமலேயே
அவள் ஒரு தேவதை தான்...

என் இமை மூடினால்,
இமை திறந்த அவள் முகம் தெரியும்.

அவள் பொய் பேசினால்,
உண்மைக்கே உண்மை பிடிக்காமல் போகும்.

அவள் ஓவியம் வரைந்தால்,
ஓவியமே அவள் தொட்ட தூரிகை தேடும்.

மறுபடியும் சொல்கிறேன்,
மிகைப் படுத்தாமலேயே
அவள் ஒரு தேவதை தான்...

ஒரு நிகழ்வு


அன்றொரு நாள்...
இரு புறமும் மரங்கள்
தாங்கிய பசுமைச் சாலையில்
உன் கைகோர்த்து நடக்க மறுத்தற்காக
கண்ணீர் சிந்தினாய்...

இன்று தான் புரிகிறது,
எல்லா சூழ் நிலைகளிலும் கண்ணீர் துளிகள்
உனக்கு மட்டும் சொந்தமானதல்ல...

Saturday, January 28, 2012

இது ஒரு கனவு



தனியொரு அறையில் நாம் இருவரும் வினவ,
விடியாத இரவாக இருள் வந்து சேர,
பற்றவைத்த தீக்குச்சியால் உன் முகம் மட்டும் மிளிர,
பிறைச் சந்திரன் ஒரு நொடியில் முழு மதி ஆனது...

என்னவளுக்கு பிடித்த என் கவிதை


எண்ணிக் கொண்டிருக்கிறேன்,
என்னவள் ஒரு மணி நேரத்திற்கு
எத்தனை முறை கண் இமைக்கிறாளென்று,
கண் இமைக்காமல்..

Friday, January 27, 2012

தனி இலை

இது ஒரு பெரிய வனத்தின்
சிறிய உறுப்பினர்...

தப்பி வந்த
ஒரு தனி இலை...

யாரும் தேடி வராத வரை
இது எனக்கே சொந்தம்...

இதன் அழகிய தோற்றம் கண்டு
இயற்கையை நேசிப்போம் நாம்...

Thursday, January 26, 2012

என் டைரி


என் டைரியின் கனவுக்கான வரிகளை
தினமும் திருடிச் செல்வது உன் நினைவுகள் தானடி...

Wednesday, January 25, 2012

பிரிவு

நாம் இணைந்த பிறகு ,
பிரிவு எப்படி சாத்தியமாகும்.
நான் எப்படி சுயநலக்காரனாக முடியும்,
என் சுயத்தையே உன்னிடம் இழந்த பிறகு..

உன்னை நினைவுபடுத்தும் எல்லாவற்றையும்
திருப்பித் தர சொன்னாயெ,
அப்படியென்றால் நான் என்னையும் தான் தர வென்டும்,
பிறகு நீ என்னை ஏற்றுகொள்ள மறுப்பது ஏன்.

வலி

அன்று உன் காதலால் என்னை
என் முதல் கவிதை எழுத வைத்தாய்,
இன்று உன் பிரிவால் என்னை முழு கவிஞன் ஆக்குகிறாய்.

உன்னைப்பற்றி நினைக்கக் கூடாது
நினைக்கக் கூடாது என
நினைத்து நினைத்தே,
உன் நினைவோடே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

மனதின் வலியை வார்த்தைகளால்
வெளிப்படுத்த முடியுமா முடியாதா
என்கிற சோதனை முயற்சியாகத்தான்
உன் பிரிவை பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன்.

என்னுடைய இந்த கவிதைகளெல்லாம் என் தமிழுக்கும்,
உன் நினைவிற்கும் பிறந்த குழந்தைகள் தானடி.

பரிசுக் கவிதை


உன் நினைவாக வைத்திருந்த
நீ கொடுத்த ரூபாய் நோட்டையும்
நேற்று கொடுத்துவிட்டேன்...

உன் நினைவாக
உன் நினைவுகளே இருக்கும் போது
பிறகெதற்கு மற்றதெல்லாம்...

உன் தம்பியின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் to My friend Nanthakumar Kandasamy